முன்னோர்களின் சாபம் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருத்தலம் | Thiruvidaimarudur Mahalingeswarar Temple for Cursing Ancestors
முன்னோர்களின் சாபம் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருத்தலம் :
மனித வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் முன்னோர்களின் சாபத்தால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
பரம்பரை சாபத்தால் ஒருவர் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுகிறார் என்றால், தஞ்சையில் உள்ள திருவிடைமருதூரில் வழிபட்டால் சாபம் நீங்கப் பெறுவர்.
சாபங்களை நீக்கும் திருவுடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் :
முன்னோர்களின் சாபம் பிரம்மஹத்தி தோஷம் எனப்படும். இதனை முறியடிக்கும் திருக்கோயில் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில். சம்பந்தர், அப்பர், சுந்தரர் போன்ற நாயன்மார்கள் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழநாட்டு காவேரி தென்கரைத் தலங்களில் காவிரிக் கரையில் அமைந்துள்ள 30வது சிவத்தலம்.
வரலாறு:
இந்த கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலின் தல விருட்சம் மருத மரம். 3 கோவில்களில் மட்டும் மருத மரம் பிரதான மரமாக உள்ளது. வடக்கே வடமருதூர் எனப்படும் ஸ்ரீசைலம், தெற்கே திருநெல்வேலி புடார்ச்சுனம் என்னும் திருப்புடை மருதூர். 3வது திருவிடைமருதூர். இக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்டது. இந்த மூன்று பிரகாரங்களிலும் வலம் வருவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
அஸ்வமேதப் பிரகாரம்:
இந்த வெளிப் பிராகாரத்தை வலம் வருவது அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும்.
கொடுமுடிப் பிரகாரம்:
இது இரண்டாவது மற்றும் நடுப்பிரகாரம். இங்கு வலம் வருவது சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வருவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
பிரணவ ப்ராகாரம்:
இது மூன்றாவது மற்றும் உள்புறமாக உள்ள பிரகாரம். இவ்வாறு வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
புராண கதை:
ஒருமுறை மாலையில் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் வேட்டையாடித் திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் தூங்கிக் கொண்டிருந்த அந்தணனின் மீது குதிரை ஏறி தெரியாமல் மிதித்து கொன்று விட்டது. வரகுண பாண்டியனுக்குத் தெரியாமல் இது நடந்திருந்தாலும், அந்தணனின் ஆவி அவனைப் பிடித்து விட்டது.
சிறந்த சிவபக்தரான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வழிபட்டார். அப்போது இறைவன் வரகுண பாண்டியன் கனவில் தோன்றி பகைவரான சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் தீரும் என்று கூறினார்.
எதிரி சோழ நாட்டிற்கு எப்படி செல்வது என்று யோசித்த போது, சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த செய்தி கிடைத்தது. இந்தப் போரில் வெற்றி பெற்ற வரகுண பாண்டியன், சோழப் படைகளை மீண்டும் அவர்களின் எல்லைக்கு விரட்டினான்.
அப்போது கிழக்கு வாசல் வழியாக திருவிடைமருதூர் கோயிலுக்குள் நுழைந்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டார். அவன் கோவிலுக்குள் நுழைந்ததும் அவனைப் பற்றிய அந்தணனின் ஆவி வெளியே நின்றது. வரகுண பாண்டியன் திரும்பி வரும்போது மீண்டும் பிடித்துக் கொள்ளலாம் என்று எண்ணியது.அப்போது இறைவன், மேற்கு வாசல் வழியாக வெளியே போ என்று எச்சரித்தார். இதனால் வரகுண பாண்டியனுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
இன்றும் இக்கோயிலுக்கு வரும் சிவன் பக்தர்கள் வரகுண பாண்டியனைப் போலவே கிழக்கு வாசல் வழியே சென்று மேற்கு வாசல் வழியே வெளியேறுகின்றனர். கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாமும் வாழ்நாளில் ஒரு முறையாவது இத்தலத்திற்குச் சென்று இறைவன் அருள் பெறுவோம்.
